சென்னை: ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக மரபுகளை மதிக்காமலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொள்வதாகக் கூறி, அவரை பதவிநீக்கம் செய்து திரும்பப் பெறுமாறு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் டி.அருண், எஸ்.அய்யாதுரை, ஏ ராஜா முகமது, டி.ஐ.நாதன், கோ.பாவேந்தன், எஸ்.டி.முஸ்தஹீம் ராஜா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தன்னிச்சையாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் அவருக்கு இல்லாத அதிகாரத்தை, இருப்பது போல நினைத்துக் கொண்டு ஜனநாயக மரபுகளை மீறி செயல்படுவதாகவும், அதன் உச்சமாக தமிழ்நாடு அமைச்சவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.
பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் அறிவுறுத்தலின்படி, செந்தில் பாலாஜி பதவி நீக்கம் உத்தரவை திரும்பப் பெற்றார். மத்திய அரசின் முடிவை தமிழ்நாட்டில் அமல்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது.
தனிப்பட்ட நோக்கங்களை அடைய நினைக்கும் ஆளுநரின் செயல்பாடுகளையும், அரசு அனுப்பும் சட்ட முன்வடிவுகளில் முடிவெடுக்காமல் இருப்பதையும் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும், குடியரசுத் தலைவரை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர்.
முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பண மோசடி புகார் இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆளுநரின் இந்த கடிதத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ஜூன் 15ஆம் தேதி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்குவதற்கும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடரவும் கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால், அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதை கடிதத்தில் குறிப்பிடாமல் இருப்பதாகக் கூறி ஆளுநர் அந்த கடித்தை ஏற்க மறுத்து, விளக்கம் கேட்டு திரும்ப அனுப்பி இருந்தார். பின்னர் அமைச்சர்களின் இலாகா மாற்ற கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 29ஆம் தேதி செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக ஆளுநர் அறிவித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்தது. ஆளுநர் தனக்கு அதிகாரம் இல்லாத விஷயங்களில் தலையிட்டு, தன்னிச்சையாக செயல்படுகிறார் என திமுகவினர் கடுமையாக சாடினர். மேலும், ஆளுநரை சட்ட ரீதியாக சந்திப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
பின்னர், தான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் அறிவிப்பை ஆளுநர் நிறுத்தி வைத்தார். மேலும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்கள் உடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்திய அரசமைப்பினை மதிக்காமலும், ஜனநாயகத்தை மதிக்காமலும் நடக்கும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இதையும் படிங்க: குரங்கு கையில் பூமாலை.. ஆளுநரை கடுமையாக சாடிய முரசொலி