புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில்," எனது மகள் கௌரி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர், சிறு வயது முதலே கிராமப்புற வளர்ச்சி குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். அதில் ஒவ்வொரு கிராமத்திற்கும் உரிய பாரம்பரியம், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.
குறிப்பாக, எங்கள் பகுதியிலுள்ள தெருக்கள், அதன் பாரம்பரியம், கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும், எங்கள் பகுதி தேவைக்காகவும், ஏரி, குளம் போன்றவற்றை அப்பகுதி மக்கள் குழுவை உருவாக்கியது குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அதன் பேரில், கிராம புள்ளிவிவர (DATA) பதிவை உருவாக்கியுள்ளார்.
இந்த கிராம பதிவை கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டுகள் வாரியாக அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் போல கிராம ஆட்சியர் என்ற ஒரு பதவியை கிராமந்தோறும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.
எனது மகள் உருவாக்கிய தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கை நூலை ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில், ஒரு பாடமாக சேர்க்க வேண்டும், இவ்வாறு சேர்க்கப்படும் பட்சத்தில், ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்.
எனவே எனது மகள் உருவாக்கிய இந்த மூன்று திட்டங்களையும் அமல்படுத்த மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி காணொலி வாயிலாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பல தகவல்களை மனுவில் சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 16ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.