இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காற்றின் மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் காற்றின் மாசுத் தன்மையால் அவசரநிலை பிரகடனம் செய்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலை படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. டெல்லியைப் போன்று சென்னையிலும் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
சென்ற வாரம் சென்னை வேளச்சேரி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தன்மை மிகவும் அபாய நிலையைத் தாண்டி சுவாசிக்க தகுதியற்றதாக மாறியுள்ளது. இது தொடர்ந்தால் விரைவில் டெல்லி போன்று சென்னையும் ஆகிவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.
சென்னையில் காற்றின் மாசுக்கு என்ன காரணம்?
காற்றின் மாசு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் பேசுகையில், ”டெல்லி காற்று மாசுக்கும் சென்னை காற்று மாசுக்கும் தொடர்பு இல்லை. சென்னை காற்று மாசுக்கு டெல்லி காரணம் என்று பழி போட இயலாது. ஆனால் டெல்லிக்கு நிகரான காற்று மாசுவை சென்னையும் உண்டாக்கி வருகின்றது. நாம் இவ்வளவு நாள் அப்படிப்பட்ட காற்று மாசிலிருந்து பாதிப்பு இல்லாமல் தப்பித்ததற்கு கடல்தான் காரணம். ஆனால் தற்போது சென்னையில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கடல் காற்றை உள் வாங்குவதில்லை.” என்றார்.
சென்னை காற்று மாசுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது சென்னையில் இயங்கிவரும் தொழிற்சாலைகள் மற்றும் அதிக அளலிலான வாகனங்கள் வெளியிடும் புகை என கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் இயங்கி வரும் இரண்டு அனல் மின் நிலையத்தால் காற்று அதிக அளவு பாதிக்கப்படுகிறது. 500 மெகா வாட் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தால் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 டன் (2500) சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் 24 ஆயிரம் டன் ( 24000) நைட்ரஜன் ஆக்சைடு (NO2) உற்பத்தியாகிறது. இதன் காரணமாக நான்கு டன் அளவு துகள்கள் வெளியாகிறது, மாசு அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணமாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் தொடர்ந்துவரும் இந்த காற்று மாசுவைக் குறைக்க அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னைவாசிகளும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘சென்னையில் காற்று மாசு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்’ -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்