சென்னை: வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பாரதி(49). இவர் மதுரவாயல் பகுதி திமுக மகளிரணி அமைப்பாளராக உள்ளார். இவர் உள்ளாட்சித் தேர்தலுக்கு நேர்காணலுக்காக சென்றுவிட்டு கிண்டி வந்தார். கிண்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் மதியம் சாப்பிட மகனுடன் சென்றுள்ளார்.
அப்போது கழிவறை சென்ற போது அங்கு அட்டை பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததார். உடனே செல்போனை எடுத்துக் கொண்டு கிண்டி காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக கிண்டி காவல்துறையினர், ஒட்டலில் எலக்டீரிசியனாக வேலை பார்க்கும் கண்ணன் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோட்டல் கழிவறைக்குள் செல்போனில் வீடியோ
இது குறித்து பாரதி கூறியதாவது, ”ஓட்டல் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ பதிவு செய்வதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறினேன். உடனடியாக உயர் காவல்துறை அலுவலர்களுக்குத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க அவர் கூறினார்.
பெண்கள் கழிவறைக்கு செல்வதைக் கூட செல்போனில் படம் பிடிக்கும் அளவிற்கு ஹோட்டல் நிர்வாகம் செயல்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு நபர் மட்டும் தொடர்பு உடையவராகத் தெரியவில்லை, ஹோட்டல் நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தெரிகிறது.
நாங்கள் செல்போனைக் கழிவறையிலிருந்து எடுத்து வெளியே வந்த பிறகு ஹோட்டலில் இருந்த ஆட்கள் உடனடியாக கழிவறைக்குச் சென்று அங்கிருந்த அட்டைப் பெட்டிகளை எடுத்து பின்பக்கமாக தூக்கி எறிந்து விட்டனர். காவல்துறையினர், இது தொடர்பாக ஹோட்டலில் பணிபுரியும் ஒருவரை மட்டும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது அவன் பணிக்கு சேர்ந்த ஆறு மாதங்கள் தான் ஆகிறது என்று அலட்சியமாக கூறுகின்றனர். இதில் ஒரு நபர் மட்டும் இல்லாமல் ஹோட்டலில் பணிபுரியும் பலருக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே காவல்துறை தகுந்த விசாரணை செய்து தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:கத்தி முனையில் வீடியோ - பாதிக்கப்பட்ட இளம்பெண் பரபரப்பு புகார்