திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகளுடன் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை எட்டப்பட்டது. மற்றொரு கட்சியான காங்கிரஸ் உடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உடன் முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறாமல் உள்ளது. இதனால் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச்4) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விக்கு சிறிதளவும் இடம் கொடுக்க கூடாது என்பதாலும், திமுக இதுவரை இல்லாத அளவில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதாலும் கூட்டணி கட்சிகளுடன் கராராக பேசி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் 30 இடங்கள் கேட்கும் நிலையில், அக்கட்சிக்கு திமுக 18 இடங்களுக்கு மேல் கொடுக்க முன்வரவில்லை, விசிக, கம்யூனிஸ்ட் இரட்டை இலக்கில் கேட்கும் நிலையில் விசிகவிற்கு 6 இடங்களும், இரண்டு கம்யூனிஸ்ட்டுக்கு தலா 7 இடங்களும் திமுக ஒதுக்க முன்வருவதால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால் திமுக - மதிமுக இடையேவும் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.
கடந்த தேர்தலில் திமுக ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்ததில், காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதும் முக்கிய காரணம். அதே போல் தற்போது திமுகவிற்கு ஆதரவான அரசியல் களம் இருப்பதால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிக இடங்களில் போட்டியிட விரும்ப வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு, அனைத்தும் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்படும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:எங்களுடன் சேர்ந்து பயணிக்க விருப்பமா... இன்னும் 3 நாள்கள் நேரம் தருகிறேன் - கமல்