Chennai Traffic: சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் அடுத்தடுத்த நாட்களில் போகி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் வசிக்கும் மக்கள், சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக நேற்று முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதற்காக சிறப்பு பேருந்து நிலையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று முன்தினம் முதல் இன்று (ஜன.13) வரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். மேலும், சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 700 பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதில், நேற்று முன்தினத்திலிருந்து தற்போது வரை 27 ஆயிரம் பயணிகள் செய்து உள்ளனர். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 10 ஆயிரம் பேர் அதிகமாக பயணித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் பொதுமக்கள் வெளியேறுவதால் இரண்டாவது நாளாக குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்காக, போக்குவரத்து பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் கூடுதலாகப் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டனர்.
மேலும், இரவு நேரத்தில் இன்னும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால் வாகன ஓட்டிகள் தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து, சென்னை புறநகர் பகுதியான கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Pongal special trains: பொங்கல் கூடுதல் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு