சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டில் கொண்டாட்டப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகவும், தமிழ் பாரம்பரியத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையானது வருகிற 15ஆம் தேதி தமிழக மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தற்போதே தமிழ்நாடு முழுவதும் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், பொங்கலுக்கு முந்தைய 2 நாட்கள் வார இறுதி நாட்கள் என்பதால், நேற்று (ஜன.12) மாலையில் இருந்தே மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர். குறிப்பாக, தலைநகரான சென்னையில் வேலைக்காக வந்து வசிக்கும் பிற மாவட்ட மக்கள், சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட புறப்பட்டு விட்டனர்.
மேலும், சென்னையிலிருந்து சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் சிறப்பு பேருந்தும் இயக்கப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் சானடோரியத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி, விக்கிரவாண்டி வழியாகச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சுமார் 200 சிறப்பு பேருந்துகள் உள்பட 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் மக்களால், தாம்பரம் - ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக நேற்று இரவில் புறப்பட்டுச் சென்றதால், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான டிராபிக்கால் சென்னையின் முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துப் போனது.
மேலும், சிறப்பு பேருந்துகளிலும் மக்கள் அதிகளவில் செல்வதால், பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் கூட மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், பைபாஸ் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை வழியாக பெருங்களத்தூர் வருவதால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்..!