சென்னை: நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தென்மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தில் தென்மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பாலச்சந்திரன், "மேற்கு திசை காற்றும், தென்மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி தென் தமிழகம் மீது நிலவுகிறது. காற்றின் கீழடுக்கு பகுதிக்கும் மேல் அடுக்கு பகுதிக்கும் நிலைத்தன்மை குறைந்து, இடி மழை கூட்டங்களாக உருமாறி, மேற்கிலிருந்து கிழக்குக்கு நகர்ந்து கடல் பகுதிகள் அருகே வலுப்பெற்றது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாகவும் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரவிருக்கும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 162 மில்லி மீட்டர் ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான பதிவு 153 மில்லி மீட்டர், ஆகையினால் இது இயல்பை விட ஆறு சதவீதம் அதிகமாக உள்ளது.
தற்போது மீனவர்கள் கடலுக்கு செல்ல எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழையால் வட மாநிலங்களில் வலுவற்ற நிலை உள்ளது. இதை break monsoon என்று அழைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேற்கு திசையில் உருவாகி நகர்ந்து கடல் பகுதியில் வரும் போது வலுப்பெறுகிறது. இதனால், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது.
வளிமண்டலத்தில் மேற்கு திசை காற்று தென்மேற்கு திசையில் இருந்து காற்று மற்றும் உயிர் அடுக்குகளுக்கு செல்லும் போது வடமேற்கு திசையில் இருந்து காற்றும் வேறு வேறு திசைகளில் இருந்து காற்று சந்திப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. அடுத்து வரவிருக்கும் இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்புள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: தேங்கிய நீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு!