சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(டிச.25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு மற்றும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 27, 28ஆம் தேதிகளில், குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி வழங்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்