சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்தனர். அதேபோல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 76 நபர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.
ஒரு நபர் பிளாஸ்மா தானம் வழங்குவதன் மூலம் இரு உயிர்களை காப்பாற்றலாம். இதுவரை பிளாஸ்மா தானத்தின் மூலம் 2,56,310 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மேலும் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா தானம் வழங்குவதற்கு, இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் 81 விழுக்காட்டினர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் படிப்படியாக தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு சிறந்த முறையில் எடுத்து வருகிறது. சர்வதேச உடல் உறுப்பு தினம் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 13) கொண்டாடப்படுவதையொட்டி பொதுமக்கள் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள்!