தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் எந்தெந்த பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்றால் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்பது விதிமுறை.
அனுமதி கேட்டு மனு அளித்த பிறகு அந்த மனு குறித்து ஆய்வு செய்து அனுமதி கொடுத்ததற்கான உத்தரவை அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படும். அதனை காவல்துறையினர் வேட்பாளர்கள் கேட்டுள்ள நேரம் மற்ற வேட்பாளர்களும் வேற வேற நேரத்தில் பிரித்து கொடுத்து ஒரே நேரத்தில் தேர்தல் பரப்புரைக்கு செல்லாத வகையிலும் வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்படாத வகையில் காவல்துறையினர் ஆலோசித்து நேரத்தை ஒதுக்கி தருவது விதிமுறை. இதற்கான உத்தரவு காவல்துறையிடமிருந்து அந்தந்த வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் டிவி ரிமோட் சின்னத்தில் கிருஷ்ணதாசன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் திருவல்லிக்கேணி பகுதியில் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு போன் கால் செய்தார்.
அங்கு தலைமை காவலராக பணிப்புரிந்து வரும் குணசேகரன் உடனே அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ. 1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கிருஷ்ணதாசன் தலைமை காவலர் லஞ்சம் கேட்ட ஆடியோவை பதிவு செய்து திருவல்லிக்கேணி தேர்தல் அலுவலரிடம் கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தலைமை காவலர் குணசேகரனை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி பின்னர் பணியிடை நீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: பழச்சாறு கடையில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய இரு காவலர்கள்!