'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிளாக் பாண்டி. 'அங்காடித் தெரு' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் இசையமைப்பாளராகவும் மாறிவருகிறார்.
பிளாக் பாண்டி கரோனா விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை, உருவாக்கி சில வாரங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதற்கு சினிமாத்துறையிலும், காவல் துறையிலும் பாராட்டுகள் குவிந்தன.
இதனைத் தொடர்ந்து "விழித்திரு நண்பா, விலகி இரு நண்பா" கரோனா விழிப்புணர்வுப் பாடலை தலைமைக் காவலர் பிரகாஷ் என்பவரை வைத்துப் பாடவைத்துள்ளார்.
இது குறித்து நடிகர் பிளாக்பாண்டி கூறுகையில், 'கரோனா வைரஸால் வீட்டில் இருக்கும் போது நமது காவல் துறையும், துப்புரவுத் தொழிலாளர்களும், மருத்துவர்களும், மின்சார ஊழியர்களும் நமக்காக உழைப்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப் பட்டேன்.
இதனை பயனுள்ளதாக மாற்ற எண்ணிய போது, அவர்களைப் பாராட்டும் விதமாகவும் மேலும் நாம் அனைவரும் வீட்டில் இருந்தால் தான் இந்த வைரஸை விரட்ட முடியும் என்பதாலும் "விழித்திரு நண்பா, விலகி இரு நண்பா" என்ற வரிகளை மையமாக வைத்து, ஒரு பாடலை நானும் எனது நண்பன் ராஜா முகமதுவும் சேர்ந்து எழுதினோம். நான் இசை அமைத்து இயக்கி இருக்கிறேன்.
இதற்கு உதவிய தேஷ்முக் சேகர் சஞ்சய் துணை ஆணையாளர் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த சென்னை மயிலாப்பூர் காவல் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மற்றும் தமிழ்நாடு காவல் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பிரகாஷம் தலைமைக் காவலர், முதல்முறையாக இப்பாடலை பாடியுள்ளார். எனவே மக்கள் அனைவரும் இந்தப் பாடலைக் கேட்டு, ரசித்து வீட்டிலேயே பாதுகாப்பாகவும் இருந்து இந்த வைரஸை விரட்ட ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில் நாம் விலகிக் கூடுவோம். நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாக்க வேண்டுகிறேன்.
ஒருவருக்கொருவர் தங்களால் முடிந்த உதவிகளை, தன் சூழலில் இருக்கும் நண்பர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் செய்து அவர்களை பசிப்பிணியில் இருந்து காக்க வேண்டும்' என்றார்.