டெல்லி உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கு இணையாக தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அலுவலர்கள் மற்றம் ஊழியர்கள் சங்கம் சார்பில், தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கை குறித்து பணியாளர் குறை தீர் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்க தலைமைப் பதிவாளருக்கு பரிந்துரைத்தார்.
இந்தப் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கப்படாததை எதிர்த்து, உயர்நீதிமன்ற பணியாளர்கள் சிலர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தலைமை நீதிபதியின் பரிந்துரையை நிராகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அலுவலர்கள் மற்றும் ஊழியரகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
பணியாளர்கள் தொடர்ந்த வழக்கையும், சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கையும் விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையை ஆளுரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல், செயலர் அளவில் நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது தவறு எனக் கூறி, தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்ய, உயர்நீதிமன்ற நீதிபதி, நிதி மற்றும் சட்டத் துறை செயலாளர் அடங்கிய குழுவை அமைக்கும் வகையில் இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
அந்தக் குழு டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பணியாளர்களின் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பணியாளர்களின் ஊதியம், படி உள்ளிட்டவைகள் தொடர்பாக விதிகள் ஏதும் வகுக்கப்படாததால், அந்த விதிகளை வகுப்பதற்கான குழுவை, தலைமை நீதிபதி நியமிக்கலாம், அந்தக் குழு நான்கு மாதங்களில் விதிகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.