முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இதையடுத்து பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாய் அற்புதம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஆகஸ்ட் 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஏற்கனவே விடுப்பு வழங்கியது தொடர்பான உத்தரவுகளை பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, சிறைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2017ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் விடுப்பு வழங்க முடியாது என மீண்டும் தெரிவித்தார்.
மேலும், பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்ததாகவும், அந்த மனு மீது உரிய முடிவெடுக்க சிறைத்துறை ஐ.ஜி.க்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்ததாகவும், பின்னர் அற்புதம்மாளின் மனுவை கடந்த ஜூலை 29ஆம் தேதி சிறைத்துறை ஐ.ஜி. நிராகரித்து விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி இந்த மனு மீது உரிய முடிவெடுக்காமல் அதனை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விளக்கமளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை மீண்டும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: தளர்வில்லா ஊரடங்கிற்கு எதிரான வழக்கு: முதலமைச்சரின் ஆலோசனைக்குப் பின் விசாரணை