குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நாளை, பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், முறையான அனுமதியின்றி பேரணி நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்கள் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ள நிலையில், தற்போது பேரணி நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை புரிந்து கொள்ளாமல் இந்தப் பேரணியை நடத்த இருப்பதாகவும் கூறினார். டெல்லி, உத்திரப் பிரதேசம், அஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது போல, தமிழ்நாட்டில் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்றும், பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு, அவசர வழக்காக, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு முன், இரவு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரணியில் எத்தனை பேர் பங்கேற்பார்கள்; பதாகைகளில் இடம்பெறும் வாசகங்கள் குறித்த விவரங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று வரை எந்த பதிலும் தெரிவிக்காததாலும், உருவபொம்மைகள், சட்ட நகல் எரிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்காததாலும், பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பின் அனுமதி மறுக்கப்பட்டதா அல்லது முன்பே கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், முன்பே நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஒருவேளை காவல் துறையின் நிபந்தனைகளை திமுக ஏற்றால் அனுமதி வழங்குவதில் என்ன பிரச்னை எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, காவல் துறை கேட்ட கேள்விகளுக்கு திமுக பதிலளிக்கவில்லை எனவும், திடீரென பேரணிப் பாதையை மாற்றுவார்கள். இப்போதைக்கு அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றுவதாக புதிய விணணப்பம் கொடுத்தால் பரிசீலிக்கப்படுமா என்பதை இப்போது சொல்ல முடியாது என அரசுத்தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
நிபந்தனைகளை மீறி போராட்டம் நடத்தினால் டிரோன் மூலம் வீடியோ பதிவு செய்தால் அது முக்கியமான சாட்சியாக இருக்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள், ஜனநாயகத்தில் போராட்டங்களை தடுக்க முடியாது என்றபோதும், காவல் துறையின் கேள்விகளுக்கு அரசியல் கட்சி பதிலளிக்காதது அபாயகரமானது எனவும் தெரிவித்தனர்.
பின்னர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், காவல் துறை உத்தரவை மீறி பேரணி நடத்தினால் அதை வீடியோ பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.