ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் பயனடையும் கீழ்பவானி கால்வாயில் ஏற்படும் கசிவு நீர் மூலம், ஆயக்கட்டுதாரர்கள் அல்லாத உழவர்களும் பயனடைந்துவந்தனர்.
இந்நிலையில், கீழ்பவானி கால்வாயை நபார்டு வங்கி நிதியுதவியுடன் சீரமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்வாய் சீரமைப்பு என்ற பெயரில் கால்வாயின் உள்பகுதி சுவரில் கசிவு துளைகளை கான்கிரீட் கொண்டு அடைப்பதாகக் கூறி, ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், கால்வாயின் உள்புறச் சுவரை கான்கிரீட் கொண்டு மூடுவதால் கசிவுநீர் வெளியேறுவது தடுக்கப்பட்டு, அருகில் உள்ள நிலங்களில் நிலத்தடி நீர் உயர்வு தடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இது சம்பந்தமாகத் தமிழ்நாடு அரசுக்கு மனு அளிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டது.
அந்த மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.