சென்னை: தமிழ்நாட்டில் கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். அதில், தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார்.
இந்த 7 வழக்குகளும் இன்று(ஜூலை 7) தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி அதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எந்த கோயிலின் பக்தர்? என கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதரார் ரங்கராஜன் நரசிம்மன், தான் எல்லா கோயில்களுக்கும் பக்தர்தான் என பதில் அளித்தார். அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது நேர்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
வழக்குகளின் கோரிக்கை நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே அந்த தொகை திரும்ப அளிக்கப்படும் எனவும், இல்லை என்றால் அந்த தொகை அபராதமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகையை செலுத்திய பிறகு வழக்குகளை பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.
ரங்கராஜன் நரசிம்மன்: திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கோயில்களில் முறைகேடு நடப்பதாக பொதுநல வழக்குகள் தொடர்ந்துள்ளார். அதேபோல் கோயில்கள் தொடர்பான பிரச்சினைகளில் பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஶ்ரீரங்கம் கோயில் தொடர்பான வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தபோது, அங்கு வழக்கறிஞர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்ற வளாகத்திலேயே தன்னை தாக்க வருகிறார்கள் எனக்கூறி, நீதிமன்றத்திற்குள் ஓடி நீதிபதிகளிடம் பாதுகாப்பு தரும்படி கேட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், சென்னை கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம் தொடர்பாக டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த வேணு சீனிவாசன் குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், மனு சாஸ்திரம், அறநிலையத்துறை விதிகள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.