சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2010ஆம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்குப் பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். அப்போது சிவசங்கர் பாபா தரப்பில், மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின்கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தன் மீதான புகாரை விசாரிக்க சட்டப்பிரிவில் இடமில்லை என வாதிடப்பட்டது.
ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்றுக் கொள்ளக்கோரி மனுதாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்கக்கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், பாலியல் தொல்லை என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்கத் தயங்குவதாகவும், இதற்கு வெறும் அச்சம் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்வாக்கும் காரணம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். செல்வாக்கான நபர்களின் சட்டவிரோதச் செயல்கள் ஒரு நாள் வெளியில் வரும் போது, அந்த நபரால் பாதிக்கப்பட்டப்பலர் புகார் அளிக்க முன்வருவது இயல்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அதேபோல இந்த வழக்கிலும் தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.