சென்னை: பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு குரோம்பேட்டை, சங்கர் நகர் முதல் தெருவை சேர்ந்த மெர்லின் ஜோஸ் (வயது-28) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், காவலாளி மெர்லின் ஜோஸ் பணியில் இருந்த போது, ஸ்விகி (swiggy) என்னும் தனியார் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் இருவர் அங்கு பணியில் இருந்த காவலாளியிடம் தகவல் தெரிவிக்காமல் குடியிருப்புக்கு உள் சென்று உணவு விநியோகம் செய்து விட்டு வெளியே வந்துள்ளனர்.
அவர்களை நிறுத்திய காவலாளி மெர்லின் ஜோஸ் இருவரிடமும் ‘இது முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி எனவும் நீங்கள் அனுமதி இல்லாமல் எப்படி உள்ளே செல்லலாம்’ என்று கேள்விகள் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்விகி ஊழியர்கள் இருவரும் ‘எங்களிடமே கேள்வி கேட்கிறாயா? நாங்கள் யார் என்று காட்டுகிறோம் பார்’ என்று கூறி, கையில் அணிந்திருந்த இரும்பு வளையத்தை கழற்றி காவலாளி மெர்லின் ஜோசின் முகத்தில் சராமாரியாக குத்தி தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ‘மணிப்பூர் மக்களின் மனதை மத்திய, மாநில அரசுகள் புண்படுத்திக் கொண்டே இருக்கிறது’ - கனிமொழி கண்டனம்
இதனால் படுகாயம் அடைந்த காவலாளி வலியால் அலறி துடித்துள்ளார். அவரது சத்தம் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்குடியிருப்பு வாசிகள்,இது குறித்து உடனடியாக பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் உடனே பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அங்கு படுகாயமடைந்த காவலாளி மெர்லின் ஜோசை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஸ்விகி ஊழியர்கள் இருவரையும் குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்கள் மீது பல்லாவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த இரு இளைஞர்களும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (18) மற்றும் ஆதவன்(23) என்பது தெரிய வந்தது.
இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆதவன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்... ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!