சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றல் மற்றும் நினைவைப் போற்றும் வகையில் மெரினா கடலில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் அவரது நினைவிடத்தின் பின்புறம், பேனா வடிவிலான நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் கடந்த ஜூன் 19ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தது.
இந்த பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி 31ல் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிலர் நினைவுச் சின்னத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கூட்டமானது உரிய சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை என்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வானது, வழக்கு குறித்து மத்திய அரசு மற்றும் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், பொதுப்பணித்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக, பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம் என்பவர் பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைவிதிக்க கோரி பசுமை தீர்ப்பாயத்தில் மனுவினைத் தாக்கல் செய்தார் அதில், “சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை உள்ள கடற்கரை பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட கடற்கரை பகுதி என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை உள்ள கடலோர பகுதிகளில் தான் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளாகும். இந்த பகுதிகளில் கட்டுமானம் மேற்கொண்டால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் எனவும், கடல் வளமும் பாதிக்கப்படும் எனவும், மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவிடம் அமைக்க தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:“பிரம்மாண்ட நடராஜர் சிலை இந்தியாவின் கலைத்திறனுக்கு ஒரு சான்றாக அமையும்" - பிரதமர் மோடி பெருமிதம்!