சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக இருப்பவர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தி பட்டா வழங்கும் வகையில் வருவாய்த் துறை செயலாளர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அரசாணை வழங்கியுள்ளார்.
கோயில் நிலங்களில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கும் பொருந்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிராக ஒழுங்குமுறை என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பை அரசே ஊக்குவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
கோயில் நிலங்களை கோயிலுக்கான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே வருவாய்த் துறையின் தன்னிச்சையான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒழுங்குமுறைப்படுத்தி பட்டா வழங்குவது என்பது ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு அரசே துணை புரிவதாக நீதிமன்றம் கருதுகிறது என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் தொடர்ந்து உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதுவரை ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், அகற்றவும் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒழுங்குமுறைப்படுத்திய பின்னர் மட்டுமே புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாவட்ட வாரியாக நடந்துவருகிறது எனவும் பதிலளித்தார்.
இதையடுத்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், அரசு வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
கிருபா மோகன் நீக்கத்திற்கு பல்கலைக்கழகம் விளக்கமளிக்க உத்தரவு!