சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 1987 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் ஒருங்கிணைப்பாளராகவும், மைசூருவில் அமைந்துள்ள ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் டாக்டர் பி.சுரேஷ், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல சிகிச்சைத் துறை இயக்குநர் எஸ்.தணிகாசலம் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இதையடுத்து, துணைவேந்தர் பதவிக்கு 37 பேர் விண்ணப்பித்தனர். அதில் 3 பெயரை இறுதி செய்து ஆளுநரின் முடிவுக்கு தேர்வு குழு அனுப்பியது. அதில் ஒருவர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஆளுநரின் முதன்மைச் செயலாளர் அனுப்பி உள்ள கடிதத்தில், தற்போதைய துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யனுக்கு வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, அடுத்த துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காகப் புதிதாகத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அக்குழுவின் மூலம் புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு துணைவேந்தரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: பாட்டி வைத்தியத்தை தரப்படுத்த நடவடிக்கை: சுதா சேஷையன் தகவல்