சென்னை பல்கலைக்கழகத்தின் 163ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார். பட்டமளிப்பு விழா மேடையில் கரோனா பரவல் அச்சம் காரணமாக மூன்று பேருக்கு மட்டும் கௌரவ முனைவர் பட்டங்களை ஆளுநர் நேரடியாக வழங்கினார்.
2019- 2020ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தின் கீழ் இளங்கலை, முதுகலை, சான்றிதழ் ஆகியவற்றில் 1,37,745 பேர் பட்டம் பெற்றனர். இதில் டி.லிட் பட்டம் பெறும் மூன்று பேருக்கு மட்டும் ஆளுநர் பட்டம் வழங்கினார். 183 பேருக்கு முனைவர் பட்டமும், தேர்வுகளில் முதலிடம் பிடித்த 86 பேருக்கு பதக்கங்களையும், 100 பேருக்கு பட்டங்களும் என மொத்தம் 869 பேருக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மற்றும் சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கலந்துகொண்டு பேசும்போது, ”புதிய கல்விக் கொள்கை நாட்டிற்கு கிடைத்த வரப்பிரசாதம். புதிய கல்விக் கொள்கை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். கரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்கள் கல்வி பயின்றனர்” எனக் கூறினார்.
இப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.