சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீஸ்வரன் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகன் இறந்து போன துக்கம் தாங்காமல் நேற்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) நள்ளிரவு அவரது தந்தை செல்வசேகரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருந்த செல்வ சேகரின் உடலுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செல்வசேகரனின் உறவினருக்கு ஆறுதல் கூறிய தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் ஒரு முறைக்கு இரண்டு முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். தேர்ச்சி பெற்றும் அவரால் அரசு கல்லூரியில் சேர முடியவில்லை. அவரது தந்தை வீடியோ புகைப்படக் கடை வைத்து தனது மகனை கவனித்து வந்துள்ளார். மேலும் மனைவியை பிரிந்து தனி ஆளாக இரவு பகல் பாராமல் உழைத்து நீட் பயிற்சி மையத்தில் தனது மகனை படிக்க வைத்துள்ளார்.
மூன்றாவது முறையும் தனது மகனை ஊக்கப்படுத்தி பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். தந்தைக்கு இவ்வளவு தொந்தரவு தருகிறோம் என்று தந்தையின் நிலையை எண்ணி மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் மகன் சாம்பலை எடுத்து சென்று கடலில் கரைக்கும் நிலையில், மகன் இல்லாமல் இனி என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணி மன அழுத்தத்தில் இருந்த அவர் அனைவரும் தூங்கிய பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்களின் பிடிவாத குணம் இதற்கு பிறகாவது மாறுமா என்று கேள்வி எழுப்பிய திருமாவளவன், ஆளுநர் மாளிகையில் பெற்றோர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆணவத்தோடு பதில் கூறியுள்ளார். அவர் பேசி இருப்பது வலியை தருகிறது எனவும், ஒரே நேரத்தில் மகன் - தந்தையை இந்த நீட் தேர்வு பலி வாங்கி உள்ளதாகவும், ஆளுநர் பிடிவாதம் 2 உயிர்களை பலி வாங்கி உள்ளது என்றும் கூறினார்.
ஆளுநர் ரவி மனம் இரங்க வேண்டும்,அவர் தனது பிடிவாதத்தை அவர் தளர்த்த வேண்டும். நீட் விலக்கு வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் கோரிக்கை” என்றும் கூறினார். தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறை வளாகம் எதிரே மத்திய அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கும் எதிராகவும் விசிகவினர் கோஷங்களை எழுப்பினர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு ஆளுநர் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கூறி திருமாவளவனுடன் சேர்ந்து 50க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு கோஷம் எழுப்பி தங்களது வீர வணக்கத்தை செலுத்தினர்.
இதையும் படிங்க: நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்- குடும்பத்தாருக்கு நூலுரிமைத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!