இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உள் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த செயலர்கள், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநர், நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், "தர்பார் திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும். ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. விரைவில் விலை நிர்ணயிக்கப்படும். பண்டிகை காலங்களில் சிறப்புக் காட்சிகளுக்கும் அரசே டிக்கெட் விலையை நிர்ணயிக்கவுள்ளது" எனத் தெரிவித்தார்.
திருட்டு விசிடியை ஒழிப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "திருட்டு விசிடியை ஒழிக்க அரசால் மட்டும் முடியாது. திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய மூன்று துறையினரும் ஒத்துழைத்தால்தான் அரசால் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் திரையரங்கில் படத்தை வெளியிடும்போதுதான் திருட்டு விசிடி வெளிவருகிறது" என்றார்.
இதையும் படிங்க : 'இப்படிப் பேசினால் எப்படி நான் வேலை செய்ய முடியும்' - வருத்தப்பட்ட வசந்தகுமார் எம்.பி.