சென்னை : திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு விதிமீறல்களுக்காக அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஏ.டி.ஜி.பி அந்தஸ்து உடைய அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் 3 ஸ்டார் பதித்த வாகனம் ஒன்று நேற்று திருவான்மியூர் பகுதியில் ஒருவழிப்பாதையில் சென்றதை பாரத்து பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை புகாரில் குறிப்பிடப்பட்ட ஏ.டி.ஜி.பி அந்தஸ்துடைய பெண் அதிகாரியின் வாகனத்தை ஓட்டி வந்த காவலருக்கு ஒரு வழிப்பாதையில் சென்றதற்காக 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன் சம்மந்தப்பட்ட காவலருக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புகார் அளித்த நபரின் பதிவுக்கு கீழ் காவலருக்கு விதிக்கப்பட்ட அபராத ரசீது மற்றும் நடவடிக்கை குறித்து சமூக வலைதளத்தில் போக்குவரத்து காவல்துறை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை’ - டிஜிபி எச்சரிக்கை