தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரு திருவிழா போன்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். முக்கியமாக சென்னையில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க மிகவும் சிரமத்துக்குள்ளாவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது வெளியூர் செல்லும் பயணிகள் அடித்துப்பிடித்து பேருந்துகளில் பயணம் செய்வதை பார்க்க முடியும்.
பூந்தமல்லி, தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைத்து நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அரசு விரைவுப் போக்குவரத்து பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வழியாக தாம்பரம் சென்று பெருங்களத்தூர் செல்வதால், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பேருந்துகளை நகருக்குள் பிடிக்க முடியாமல் பயணிகள் அவதியுறும் நிலை இருந்துவந்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்றுவந்தனர்.
இந்த முறை இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி, விழுப்புரம் தண்டி திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து வடபழனி, அசோக் பில்லர், கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக இயக்குவது என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வெளியூர் செல்லும் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.