சென்னை: கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட ஜெயபால், மாரிமுத்து உள்ளிட்டோரை ஓட்டுநர்களாகப் பயன்படுத்தி வந்தது. இதனால், தங்களை ஓட்டுநர்களாக நியமிக்கக் கோரினர். ஆனால், கல்வித்தகுதியைக் காரணம் காட்டி அவர்களுக்கு ஓட்டுநர்களாகப் பணி நியமனம் வழங்க அரசு மறுத்தது.
இதை எதிர்த்து ஜெயபால் உள்ளிட்ட 7 பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓட்டுநர் பணிக்கான கல்வித்தகுதியை 10ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானது எனத் தளர்த்திக் கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையையும், உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தூய்மைப் பணியாளர்களை ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதையும் மேற்கோள்காட்டி, ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேரை டிரைவர்களாக நியமிக்கும்படி, 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வு, குறைந்த ஊதியம் பெறும் தூய்மைப்பணியாளர்களை, அதிக ஊதியம் வழங்க வேண்டியுள்ள ஓட்டுநர் பணிக்காகப் பயன்படுத்தியது என்பது, சொந்த குடிமக்களை அரசே சுரண்டுவதைப் போன்றது என அதிருப்தி தெரிவித்தது.
இதுபோல மக்களைச் சுரண்டுவதை அரசு நிறுத்த வேண்டும் எனவும், அரசு ஒரு மாதிரி முதலாளியாகச் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளையும், சுரண்டல்களையும் அரசு பின்பற்றாது என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் நலச் சட்டங்களில் அரசை சேர்க்கவில்லை என்றும், சுட்டிக்காட்டி, அரசின் மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து, இரண்டு மாதங்களில் ஏழு பேருக்கும் ஓட்டுநர்களாகப் பணிநியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க:Thaipusam: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!