அரசுப் பள்ளிகளில் இசை, தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அலுவலகம் முன்பு 2ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியயைகள் கூறும்போது, “கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறோம். தற்போது 12,843 பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணியில் உள்ளோம். அரசு எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அளித்த ஊதிய உயர்வு வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை.
நாங்களும் எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய உள்ளோம். மேலும் எங்களுடன் நெருங்கிய உறவினர்கள் என 10 லட்சம் ஓட்டுகள் எங்கள் மூலம் மாற்றப்படும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு அடிப்படை வசதிகள் இங்கு கிடைக்கவில்லை. கழிவறைகளை மூடி வைத்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிலை இவ்வாறு தான் உள்ளது. அரசு பணி நிரந்தரம் செய்யும் வரை நாங்கள் இங்கு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.