சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அலுவலக நேரத்திற்கு வந்து செல்வார்கள். அவர்கள் பள்ளி தொடங்கும் நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை. இந்த நிலையில் பள்ளிகளில் அலுவலகப் பணியாளர்களின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று(மே.10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10 மணி முதல் 5.45 மணி வரையில் உள்ளதால், பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக குறைபாடு ஏற்படுகிறது.
பள்ளியின் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது. மேலும், அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டிற்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
எனவே, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரமானது காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் மாற்றி அமைக்கப்படுகிறது. கோடை விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மணிப்பூரில் சிக்கித்தவித்த தமிழ்நாட்டு மாணவர்கள் சென்னை வருகை