சென்னை: உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் கரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3.48 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மே 1ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தமிழ்நாடு அரசிடம் போதுமான அளவிற்கு கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் கரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்குத் தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லாததால் தமிழ்நாடு அரசே தடுப்பூசியை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசியை நேரடியாக இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், குறுகிய காலத்தில் 18 வயதிலிருந்து 45 வயதுடைய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.