தமிழ்நாடு அரசால் திருமண நிதி உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதாவது திருமண நிதி உதவித் தொகை ரூ.25,000, ரூ.50,000 பணத்துடன், தாலி செய்ய எட்டு கிராம் தங்கக் காசு வழங்கப்பட்டுவருகிறது.
இத்திட்டமானது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள, ஏழை எளிய மக்களுக்கு மட்டும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றைத் திட்டமிட்டுள்ளது.
மாடி வீடு இருந்தால் உதவித்தொகை இல்லை
இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமண நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்போர் குடும்பத்தில் யாரேனும் அரசுப் பணியில் இருக்கிறார்களா, வேறு ஏதாவது திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் பயன்பெற்றுள்ளாரா என்பதை ஆய்வுசெய்த பின், அதனை நடைமுறை செய்ய வேண்டும்.
மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் மனுதாரர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
குடும்ப ஆண்டு வருமான சான்றினை ரூ.72,000-க்குள் சமர்த்திருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு நிதியுதவி தொகை கிடையாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.