அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் பணியில் உள்ள சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஊதிய உயர்வு வழங்கக் கோரி ஜனநாயக முறையிலான போராட்டங்களை நடத்திவருகிறோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
- அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வைப் பணியில் சேர்ந்த 13ஆவது ஆண்டில் வழங்க வேண்டும்.
- மருத்துவர்கள் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
- அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புகளிலும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் வழங்கிவந்த 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு நேர்மையான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தி பணியிடம் வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினோம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டோம். அப்போது எங்களை அழைத்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், ஆறு வாரத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கையை நிறைவேற்றுவதாகத் தெரிவித்தார். ஆனால் இதுநாள் வரை அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி நோயாளிகள் பாதிக்காத வகையில் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்கிறோம். எங்களின் வேலைநிறுத்தத்தின்போது பொதுமக்களின் உயிர் காக்கும் பணியினை தொடர்ந்து செய்வோம்" என்றார்.
இதையும் படிங்க: 25ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்: மருத்துவர் சங்கம் அறிவிப்பு!