சென்னை: மாநில பாடத் திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 8) வெளியிடப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023 - 2024) விண்ணப்பங்கள், www.tngasa.in என்ற இணையதள முகவரியில் நேற்று காலை முதல் தொடங்கியது.
இதற்கு வருகிற 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் 48 ரூபாய், பதிவுக் கட்டணமாக 2 ரூபாயும் சேர்த்து மொத்தம் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்றும், பதிவுக் கட்டணமாக 2 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், இந்த விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் போன்ற இணைய வழியில் செலுத்தலாம்.
அதேநேரம், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ‘The Director,Directorate of Collegiate Education, Chennai – 15’ என்ற பெயரில் மே 8ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம்.
மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டியல் மற்றும் விபரங்கள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவர் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப் படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முதல் தொடங்கிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவில் முதல் நாளிலேயே, அதாவது நேற்று மாலை வரை 18 ஆயிரத்து 322 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை!