சென்னை: சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்.7) நடைபெற்றது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலுரையில், "தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என சொல்லும் அதிமுகவினர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட முழுமையாக மின் இணைப்பை வழங்கவில்லை.
2011-2016 ஆம் ஆண்டுகளில் 82 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளும், 2016-2021 ஆம் ஆண்டுகளில் 1.38 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
2006-2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அனல் மின் நிலையங்கள் மூலம் 85 விழுக்காடு என இருந்த மின் உற்பத்தி 2011-2016 ஆம் ஆண்டுகளில் 78 விழுக்காடு என குறைந்துள்ளது. பின்னர் 2016-2021 ஆம் ஆண்களில் 58 விழுக்காடு என குறைந்துள்ளது.
தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்காகதான் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. அதிமுக ஆட்சியில் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதில் குறுகிய கால ஒப்பந்தம் போடாமல் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் வெளி மாநிலத்தில் 7 ரூபாய் 1 பைசாவுக்கு வாங்கிய மின்சாரத்தை, தமிழ்நாடு ஏரிசக்தி கழகம் மூலமாக 2 ரூபாய் 61 பைசாவுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்கள் மூலமாக மின் உற்பத்தியை பெருக்குவதே அரசின் இலக்கு" என்றார்.
இதையும் படிங்க: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு