கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவு செய்து காணொலி வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்தர் உள்பட நான்கு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதேபோல, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக கருத்து பதிவிடுவதாக கூறி இந்து தமிழர் பேரவை கோபால் என்பவர் தனது யூடியூப் சேனலில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், நேற்று கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்தர் மற்றும் இந்து தமிழர் பேரவை கோபால் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக காணொலி வெளியிட்டதாக இதுவரை மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.