சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அதிகளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுங்கத்துறை அலுவலர்கள் விமான பயணிகளை தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தொடர்ந்து உடமைகளை சோதனை செய்ததில் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கச் செயின் மற்றும் தங்க தகடு ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதில் ரூ.22,19,000 மதிப்புள்ள 507 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் விமான நிலைய சுங்க பகுதி வளாக கழிவறையில் அலுவலர்கள் சோதனை செய்தபோது, பார்சல் ஒன்று இருந்துள்ளது.
பின்னர் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதனுள் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ 290 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு ஒரே நாளில் ரூ.1 கோடியே 22 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 797 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘நான்கு பேரும் இறக்க போகிறோம்’ - சொகுசு கார் விபத்துக்கு முன் எடுத்த வீடியோ வைரல்