மேற்கு தாம்பரம் சி.டி.ஓ. காலனி ஸ்ரீசாய்நகர் 2ஆவது பிரதான சாலையில் வசித்து வருபவர் ரவி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவருகின்றார். இவர் பொங்கல் பண்டிகையையொட்டி தனது மனைவியின் சொந்த ஊரான தேனிக்கு வீட்டை பூட்டிவிட்டு கடந்த 10 நாள்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.
நேற்று (ஜன.18) அவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அக்கம்பக்கதினர், வீட்டின் உரிமையாளருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது, வீட்டில் உள்ள அனைத்து கதவுகளும் உடைக்கபட்டு, நகை, பணம், பொருள்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இன்று (ஜன. 19) காலை குடும்பத்துடன் வீட்டை வந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ள நான்கு கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. பிரோவில் இருந்த 4 சவரன் நகை, 300 கிராம் வெள்ளி, எல்.சி.டி. டிவி, லேப்டாப், அரிசி, மளிகை சாமன், பித்தளை பொருள்கள் என வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் ரவி அளித்த புகாரின் பேரில் தாம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க... நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்த போலி போலீஸ்!