சமீப காலமாக தொலைக்காட்சிக்கு நிகராக வெப் சீரிஸ்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான 'காட்மேன்' வெப் சீரிஸ் டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே பலராலும் பேசு பொருளாகி ட்ரெண்டிங் ஆனது.
இதைத் தொடர்ந்து, 'காட்மேன்' டீசருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் டீஸர் அமைந்துள்ளது என்றும் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், ஜீ 5 என்ற ஆன்லைன் சேனலில் 'காட்மேன்' தொடரின் டீஸர் கடந்த 12ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த டீஸரில் ஒரு குறிப்பிட்ட பிராமண சமூகத்தை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் சாமியார் வேடமிட்ட ஒருவர் 'என்ன சுற்றியிருக்கிற அனைத்து பிராமணனும் அயோக்யனாதான் இருக்காங்க' என்று வசனம் பேசி நடித்திருக்கிறார்.
இது ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மத ரீதியாக இருக்கும் பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும், அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் உள்ளது. இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த டீஸரில் பிராமணர்களைப் குறித்தும், இந்து மதத்தை குறித்தும் அவதூறான கருத்துக்களும், கொச்சையான வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எந்த ஒரு மதத்தையோ, சமூகத்தையோ குறிப்பிட்டு அசிங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரிந்ததே.
கடந்த சில காலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தை சாதியை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்களை திரைப்படத்தில் வைப்பது வாடிக்கையாகிவிட்டது. இது மேலும் தொடர்ந்தால் தவறான முன்னுதாரணமாகி தமிழ்நாட்டை வன்முறைக்கு அழைத்துச் செல்லும். இது போன்ற செயல்களை தடுக்கும் விதமாக இதில் நடித்த நடிகர்கள் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி, நிர்வாக தயாரிப்பாளர் சுகுமாரன் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 'காட்மேன்' தொடரை தடை செய்து ஒளிபரப்பவிடாமல் செய்ய வேண்டும்' என்று கேட்டு கொள்கிறேன்.
இதனையடுத்து 'காட்மேன்' வெப் சீரிஸின் டீஸர் யூடியூப் தளத்தில் இருந்தும் ஜீ 5 இணையதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... சர்ச்சையை ஏற்படுத்திய 'காட்மேன்' டீசர்!