சென்னை: ராமர் கற்சிலை ஒன்று வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாக சென்னை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இது குறித்த தகவலின் பேரில் காவலர்கள் சென்னை ஆலந்தூரில் உள்ள எஸ்ஏஎஸ்எல் (Sasl) என்ற ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சோதனையிட்டனர்.
அப்போது வெளிநாட்டிற்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைத்திருந்த சுமார் இரண்டு அடி உயரமும், 1அடி அகலமும் கொண்ட பீடத்துடன் கூடிய புராதன ராமர் கற்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கற்சிலை குறித்தான எந்த ஆவணமும் நிறுவனத்திடம் இல்லாததாலும், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அச்சிலையைப் பறிமுதல் செய்தனர். மேலும் சிலையை ஜெர்மனி நாட்டிற்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த ராமர் கற்சிலையின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் எனத் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட சிலையின் தொன்மை மற்றும் எந்தக் கோயிலை சேர்ந்தது என்றும் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்; வட்டாட்சியர் கைது!