சென்னை மாதவரத்தில் உள்ள கல்லூரி அருகே ஆட்டோ ஒன்றில் கஞ்சா விற்கப்படுவதாக போதைப் பொருள் தடுப்புக் குற்ற புலனாய்வுத் துறைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த கோட்டைசாமி என்பவரும், சென்னையில் தலைமை செயலகம் அருகே உள்ள சத்யா நகரை சேர்ந்த உதயகுமார் என்பவரும் சேர்ந்து 40 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக, 50 கிராம் பாக்கெட்டுகளாக இரு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
இதன் அடிப்படையில், கோட்டைசாமி, உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத் துறைக்கு தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிசெய்த நீதிபதி, கஞ்சா விற்ற கோட்டைசாமி, உதயகுமார் ஆகிய இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், கோட்டைசாமிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும், உதயகுமாருக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் என மொத்தமாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய கல்வி கொள்கை மூலம் தரமான கல்வி - சென்னை ஐஐடி இயக்குனர் பெருமிதம்!