சென்னை: கொளத்தூர் பூபதி நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்லால். இவர் கொரட்டூர் ராகவேந்திரா நகர் பிரதான சாலையில் 'பவானி ஸ்டோர்' என்ற மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
மளிகை விற்பனை குறைந்து வருமானம் குறையத் தொடங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில், வேறு தொழில் செய்து வருமானத்தை ஈடுசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள், போதைக்கு அடிமையானவர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். சூர்யா நடித்த அயன் படத்தில் வருவது போல் கஞ்சா வாங்க வருபவர்களிடம் டோக்கன் இருக்கும் அந்த டோக்கனை மளிகை கடையில் பொருள்கள் வாங்க வருவது போல் வந்து, அதைக் கொடுத்து மற்றொரு டோக்கனுடன் ஒப்பிட்டுப் பார்த்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
அப்போது பொதுமக்கள் மளிகைப் பொருள்கள் வாங்க வந்தால், கஞ்சா வாங்க வந்திருப்பவர்களை சைகை காட்டி காத்திருக்க சொல்வார். அதன் பிறகு மளிகை கடையில் அரிசி, இதர பொருட்களை எடை போடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளை கொண்டு கஞ்சாவை எடை போட்டு பொட்டலங்களாக செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து, கொரட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை காவலர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், பவானி ஸ்டோர் மளிகை கடைக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் சென்று வந்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்று மோகன்லாலிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
கடையில் சோதனை செய்ததில் மிளகாய் மூட்டையில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை எடைபோட பயன்படுத்திய கருவியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக, ஜெகதாம்பிகை நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்தவர்களை இரண்டு நாள்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போதைப்பொருளுக்கு எதிராக அனிமேஷன் மூலம் காவல் துறை விழிப்புணர்வு