சென்னையில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க டிரைவ் அகைன்ஸ்ட் டிரக் என்ற ஆப்ரேஷன் மூலமாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், வண்ணாரப்பேட்டையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக ஒரு கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதில் இருந்த சாக்லேட் பாக்கெட்டுகளில் கஞ்சா வைக்கப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, தி.நகர் பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட் பாக்கெட் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனால் தனிப்படை அமைத்து தி.நகரில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பள்ளி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்துள்ளார். அப்போது கையும் களவுமாக போலீசாரிடம் பிடிப்பட்டார். அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, பிகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரன் யாதவ்(43) என்பதும், இவர் தனது உறவினரான ராயப்பேட்டையில் பீடா கடை நடத்தி வரும் அமுல் குமார் யாதவ் என்பவருடன் சேர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
குறிப்பாக, பிகாரில் கஞ்சா சாக்லேட்டை ஒரு ரூபாய்க்கு வாங்கி ரயில் மூலமாக சென்னைக்கு கடத்தி வந்து இங்கு 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. சென்னையில் நேரடியாக கஞ்சா விற்பனை செய்தால் எளிதாக போலீசார் கைது செய்வார்கள் என்பதால் கஞ்சாவை சாக்லேட் போல் செய்து விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அதிலும், பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் உறவினரான அமுல் குமார் யாதவ்வை போலீசார் தேடி வருகின்றனர்
இதையும் படிங்க: "விமானப் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் போர்டிங் பாஸ் வழங்கும் திட்டம்"