சென்னை: நொளம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான யுனிசெக்ஸ் சலூன்
(Guys and Dolls) செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை (டிசம்பர் 10) வாடிக்கையாளர்கள் போல் இந்த கடைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் கடையில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்கள் உட்பட 7 பேரை பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
கத்திமுனையில் அவர்களிடம் இருந்த 2.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 8 விலை உயர்ந்த செல்போன்கள், பெண் ஊழியர்கள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 சவரன் தங்க நகை மற்றும் கடையின் கல்லாவில் இருந்த 7,500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு முகத்தை மூடியபடி அங்கிருந்து தப்பியோடினர்.
இதுதொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பவ இடம் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரண்டு, இரண்டு பேராக வாடிக்கையாளர் போல் கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
அதனடிப்படையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பைக்கிற்காக ஆடு திருடி அகப்பட்ட கல்லூரி மாணவன்.. பொதுமக்கள் தர்ம அடி!