சென்னை: கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாட்டில் காவல் துறை அனுமதி வழங்கியதன் பெயரிலும், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன.
அதன் அடிப்படியில், சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்ஜிஆர் நகர், வடபழனி, சைதாப்பேட்டை வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று (செப். 24) குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாகச் சென்று, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் குறிப்பிட்ட சில சிலைகள் மட்டும் கடலில் கரையாமல் இன்று (செப் 25) காலை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கி குப்பை மேடாக காட்சி அளித்தது.
இதை அடுத்து, கரை ஒதுங்கிய சிலைகள் தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இதன் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் கலந்துரையாடி, கரை ஒதுங்கிய சிலைகளை அகற்றக்கோரி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் கூறியதாவது, "சென்னை பட்டினப்பாக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 30 இருந்து 50 சிலைகள் மட்டும் கரையாமல் கரை ஒதுங்கி உள்ளன. மேலும், நேற்று பெய்த மழையின் காரணத்தால் இதுபோன்று நடந்திருக்கலாம். இந்த கரை ஒதுங்கிய சிலைகளை அகற்ற தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் 13 பணியாளர்கள் இதற்காகப் பட்டினப்பாக்கம் கடற்கரையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேடவாக்கத்தில் தேங்கும் மழை நீர்!... எப்போது தான் தீர்வு?.. அவதியில் மக்கள்!