சென்னை: இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பது தொடர்பாக பாமக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது பேசிய பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணி, ‘ஆணையத்திற்கு ஒரு மாத கால அவகாசம் நீட்டித்தால் போதாதா? எதற்காக 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும்? அண்மையில் நடைபெற்ற அரசுத் தேர்வுகளில் ஒரு வன்னிய சமுதாயத்தினர் கூட தேர்ச்சி பெறவில்லை. இது எவ்வளவு பெரிய அநீதி?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘10.5 சதவீத உள் ஒதுக்கீடு எந்தச் சூழலில், எந்த நேரத்தில், எதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது? தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நாளில், அவசர கோலத்தில் கொண்டு வந்ததால் நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளோம். ஆணையம் கேட்டதாலேயே நீட்டிப்பு வழங்கி இருக்கிறோம்’ எனக் கூறினார்.
இதனையடுத்து பேசிய ஜி.கே.மணி, ‘ராமதாஸ், கடந்த இரு ஆண்டுகளாக வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாள் கூட முதலமைச்சருக்கு எதிராகப் பதிவிட்டதில்லை. முதலமைச்சரை பாராட்டியே வருகிறார்’ எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ‘சமூக நீதியைக் காப்பதில் அனைத்து கட்சிக்கும் பங்கு உண்டு. வன்னியர் உள் ஒதுக்கீடு, அதிமுக ஆட்சியில் அவசரமாக வெளியிட்டாலும், அதனை திமுக ஆட்சியிலும் செயல்படுத்தினோம். மீண்டும் அந்தத் தவறு வந்து விடக்கூடாது என்பதற்காக, 6 மாத கால அவகாசம் வழங்கி உள்ளோம். ஆணையம் 4 மாதத்திலே அறிக்கை தந்தால், உங்களை விட முதலமைச்சர் மகிழ்ச்சி அடைவார்’ எனக் கூறினார்.
இதனையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், ‘ஒட்டுமொத்த வன்னியர்களும் திமுக பக்கமே இருக்கிறார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்களை சுட்டுக் கொன்றது யார்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, ‘வன்னியர் இட ஒதுக்கீடு உணர்வுப்பூர்வமான பிரச்னை என்பதால் பொறுமையாகக் கையாள வேண்டும். முதலமைச்சரும், துரைமுருகனும் அழகாக விளக்கம் அளித்துள்ளனர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேல்முருகன் கூறிய கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ எனக் கூறினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘வேளாண் அமைச்சர் பேசிய கருத்துகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால், வேல்முருகன் யாரையும், எந்த கட்சியையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. எனவே, நீக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்றார்.
இதனையடுத்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, ‘கடந்த 1989ஆம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸ், கருணாநிதியைச் சந்தித்து இட ஒதுக்கீட்டின் கதாநாயகன் எனக் கூறி, மகாராஜா இருக்கையை வழங்கினார் என்பதைச்சொல்ல விரும்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, ‘இட ஒதுக்கீடு என்று சொன்னால், அதனை ஏற்படுத்தித் தந்தவர் கருணாநிதி தான். ஒட்டு மொத்தமாக 20 சதவீதம் இருப்பது வன்னியர்களுக்கு நல்லதா அல்லது 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு இருப்பது வன்னியர்களுக்கு நல்லதா என்பதை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்’ என்றார்.
அப்போது பேசிய கே.பி.முனுசாமி, ‘இட ஒதுக்கீடு கொள்கையில், திராவிட இயக்கங்கள் அவரவர் ஆட்சியில் மிகப்பெரிய பங்கை அளித்திருக்கின்றன. ஜெயலலிதா தான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தார்’ என கூறினார்.
இறுதியாக பேசிய ஜி.கே.மணி, ‘வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் நிச்சயம் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஒரு மாதத்திற்குள் ஆணையத்தின் கால அவகாசத்தை முடியுங்கள் என்றுதான் சொல்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி வளர வேண்டியவர் என சொன்ன வானதி; அமித் ஷா பெயரை அவைக்குறிப்பில் நீக்கக்கோரிய நயினார்