புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. புதிய கல்விக்கொள்கையின் வரைவு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து அதன்மீதான விவாதங்கள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. இந்தச்சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த விவதாங்கள் தீவிரமடைந்தன.
புதிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ள மும்மொழிக்கொள்கையை தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் எதிர்த்துள்ளன. இருந்தபோதிலும், மும்மொழிக்கொள்கையை சில கல்வியாளர்கள் ஆதரித்துள்ளனர். அதில் ஒருவராக விளங்கும் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மும்மொழிக்கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், மும்மொழிக் கொள்கையின் மீதான உங்கள் பார்வை என்னை வேதனையடையச் செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இருமொழிக்கொள்கை என்ற பெயரில் மற்ற இந்திய மொழிகளை கற்க மாணவர்கள் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தடுக்கப்படுகிறார்கள். இருமொழிக்கொள்கையால் கடுமையா பாதிக்கப்பட்டதில் நானும் ஒருவன்.
நகர்ப்புறங்களில் சிபிஎஸ்சி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் மொழியைக் கற்கும் சுதந்திரம் இருக்கும்போது, இருமொழிக்கொள்கையை வலியுறுத்துவதால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மும்மொழிக்கொள்கையை எதிர்ப்பவர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்தியை மகிழ்ச்சியாக கற்கிறார்கள். சிலர், இந்தியை கட்டாயமாக மொழியாக கொண்டிருக்கிற சிபிஎஸ்சி பள்ளிகளையும் நடத்திவருகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை எந்த மொழியையும் கட்டாயமாக கற்கவேண்டும் என வலியுறுத்தவில்லை. விரும்பிய மொழியை கற்கலாம் என்றே கூறியிருக்கிறது. இந்தியா முழுவதும் பெருமளவில் பேசப்படும் இந்தியை நம் இளைஞர்கள் கற்பதன் மூலம் மிகவும் பயன்பெறுவார்கள்.
ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இருமொழிக்கொள்கைக்காக வாதிட்ட அண்ணாவை அரசியல்வாதிகள் தற்போது குறிப்பிட்டு பேசுகிறார்கள். தற்போது வணிகம், தொழிற்துறை, கலாசாரம், நாட்டின் அரசியல் சூழல் உள்ளிட்டவை மாற்றமடைந்துள்ளன. தற்போது அண்ணா இருந்திருந்தால், எப்படி திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டு தனது பார்வையை மாற்றினாரோ, அதேபோல் இருமொழிக்கொள்கை குறித்த தனது பார்வையை மாற்றியிருப்பார்.
நமது இளைஞர்களை வளப்படுத்தி, ஊக்கப்படுத்தி தேசிய நீரோட்டத்துடன் கலக்கவைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வைப்பது நமது கடமையாக தற்போது உள்ளது.
நாம் ஏன் மும்மொழிக் கொள்கையை எதிர்கிறோம்? கூடுதலாக ஒரு மொழியை நாம் கற்பதால் எதை நாம் இழக்கப்போகிறோம்? 'ஒரு மொழியை கற்பதன் மூலம் ஒரு போரைத் தவிர்க்கலாம்' என்ற அரபி பழமொழி இன்றைய காலச் சூழ்நிலையில் எத்தனை பொறுத்தமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்