அதிமுக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் (மார்ச் 10) நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முன்னாள் மக்களவை உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பல்லாவரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தன்சிங்கிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பல்லாவரம் காவல் துறையினர், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தன்சிங், 2016ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.