சென்னை: மின்கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தி அதிமுக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்கள் நல பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் விளம்பரத்தில் கவனம் செலுத்தும் கோயபலஸ் அரசகாவே இந்த அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இவற்றை காதுகொடுத்து கேட்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி கொடுத்து இருந்தாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் மிக பெரிய அளவில் பாதிக்கப்படும், சென்னையின் அடையாளமே பறிபோகும் நிலை ஏற்படும். எதிர்க்கட்சி என்னும் பெயரில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். கருணாநிதி புகழ்பாடும் அரசாகவே இந்த அரசு உள்ளது. அறிவாலயத்தில் பேனா சிலை வைக்க வேண்டியது தானே?.
எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது என்ற பண்ருட்டி ராமசந்திரனின் கருத்து அவர் தனிப்பட்ட கருத்து. ஓபிஎஸ் கோஷ்டியால் அதிமுக கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் ஏதாவது கூட்டமோ ஆர்பாட்டமோ நடத்த முடியுமா? அதிமுக சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது, தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்னும் பாடலை பாடியும் தொண்டர்களை பாட வைத்தும் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும் - பிரதமர் மோடி