முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது, அவரது வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரியது உள்ளிட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் ஆகியோர் தரப்புக்கு வழங்கியதோடு, அவர்களை முதல்நிலை சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்தது.
அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு முன் அரசு, தீபா, தீபக் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டு, அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது. இதற்கிடையே வழக்கு விசாரணையின்போது வருமானவரித் துறை தரப்பு தங்களுக்கு, 36.9 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
இதையடுத்து நினைவில்லமாக மாற்ற ஏதுவாக, தற்போது தீபா, தீபக் ஆகியோருக்குச் சேரவேண்டிய இழப்பீட்டை வழங்கும் வகையிலும், வருமானவரித் துறைக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் 67.9 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013இன் படி, 12 ஆயிரத்து 60 சதுரஅடி பரப்பளவு கொண்ட வேதா நிலைய இல்லத்தின் கட்டட மதிப்பு 2.7 கோடி ரூபாய் எனவும், இழப்பீடு எல்லாம் சேர்த்து தீபா, தீபக் தரப்புக்கு 29.3 கோடி ரூபாய் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேதா நிலையம் விவகாரம்: தீபக் மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்க பரிந்துரை!